🙏தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏
1. சாட்சி:
எனது பெயர் மார்கிரேட், என் கணவரின் பெயர் சி. இம்மானுவேல். நாங்கள் ராசிபுரம் வட்டத்திலுள்ள மங்களபுரம் என்ற கிராமத்தில் தேவனுடைய ஊழியத்தை செய்துவந்தோம். எனது கணவனார் சேலம் மாவட்டத்திலுள்ள பனமரத்துப்பட்டி என்ற பகுதியில் 1972- ஆம் ஆண்டு ஒரு இந்து பக்தி வைராக்கிய குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயது முதல் விக்கிரக வழிபாட்டு கிரியைகளில் வளர்க்கப்பட்டார். என் கணவனாருடைய தந்தையார் தர்மகர்த்தாவாக இருந்தவர், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருந்தவர். குடித்துவிட்டு வந்து எப்பொழுதும் குடும்பத்திலுள்ளவர்களை எல்லாம் அடித்து சண்டை போடுவார். குடும்பத்தில் அநேக கடன் பிரச்சனைகள், வறுமை, வேதனை போன்ற பிரச்சனைகள் இருந்தது. கடன் கொடுத்தவர்கள் வந்து கடனைக் கொடுக்கும்படி மிரட்டுவார்கள் அதுமட்டுல்லாமல், என் கணவனாருடைய உடல்நிலையில் அனேக பிரச்சனைகளும் இருந்து வந்தது, இந்த பிரச்சினைகளிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் நம்பின தெய்வங்களை எல்லாம் வழிப்பட்டு பொருத்தனைகளை செலுத்தி, ஆடு, கோழி என்று வெட்டியும் ஒன்றும் நடக்கவில்லை ஜோசியர்களை நம்பி சென்றால் அவர்கள் சொன்னது '' எல்லாம் விதிபடிதான் நடக்கும் '' என்று சொல்லிவிட்டார்கள். பிரச்சனைகளுக்கு விடுதலைக்கொடுக்க இந்த உலகத்தில் எந்த தெய்வமும் இல்லை என்று நினைத்து குடும்பமாக தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கண்ணீர்விட்டும், மனவேதனையோடும் இருந்த நேரத்தில், அன்று அவர்கள் கிராமத்தில் இயேசுவைப் பற்றி சுவிசேஷம் சொல்ல குழுவாக வந்து கைபிரதிகளைக் கொடுத்து, அவர்கள் சொன்ன வார்த்தை '' வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் இயேசுவிடம் வாருங்கள் அவர் உங்களுக்கு இளைப்பருதல் தருவார் " அதுவரை அவர்கள் கேட்காத வார்த்தை இப்படியும் ஒரு தெய்வம் இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டு அந்த நாளில் போய் பிரச்சனைகளை சொன்னார்கள். அவர்கள் ஜெபித்து இயேசுவைப் பற்றி மேலும் சொன்னார்கள், அதன் பிறகு ஆலயத்திற்கு சென்று பாவங்கள், சாபங்கள், கண்ணீர், வறுமை, கடன் போன்ற பிரச்சினைகளிலிருந்து இயேசுவால் தான் விடுதலை கொடுக்க முடியும் என்று விசுவாசித்தார்கள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் மாற இயேசுவானவர் உதவி செய்தார், இதைக் கண்ட என் கணவனாருடைய தத்தையும் இரட்சிக்கப்பட்டு திருச்சபைக்கு வந்தார். படி படியாக தேவன் அவர்கள் பிரச்சனையை மாற்றினார். அவர்கள் 1989- ஆம் ஆண்டு குடும்பமாக தேவனுக்குள் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். அதை தொடர்ந்து திருச்சபைக்கு சென்றனர்.
இதை தொடர்ந்து கிறிஸ்து தங்களுக்கு செய்த அற்புதமான காரியங்களை பிற மக்களும் பயனடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சபைக்கு வருகின்ற இளைஞர்களோடு சுவிசேஷம் சொல்ல குழு குழுவாக இணைந்து வாரம்தோறும் சென்று அங்கு பக்கத்திலுள்ள கிராமக்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றியதான சுவிசேஷத்தை அறிவித்து வந்தனர். அன்று தேவன் இஸ்ரவேல் ஜனங்களை இரட்சிக்க எப்படி கிதியோனை ஏற்படுத்தினாரோ அதேபோல் இந்த ஜனங்களை இரட்சிக்க நான் உன்னை ஏற்படுத்தியுள்ளோன் என்று தேவன் சொன்ன வார்த்தைக்கு இணங்க 2003- ஆம் ஆண்டில் மங்களபுரம் என்ற பகுதியில் தேவனுக்குகென்று ஊழியம் செய்ய குடும்பமாக சென்றோம். ஒரு சிறு பிள்ளையை கூட அந்த பகுதியில் எங்களுக்கு தெரியாத நிலைமையில் சென்றோம்,ஆனால் தேவன் தற்போது எங்கள் திருச்சபையில் 50 குடும்பம் இரட்சிக்கப்பட்டு வந்துகொண்டு இருக்கின்றனர். ஆயில்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, திருமானூர் என அநேக இடங்களில் சுவிசேஷம் சொல்ல செல்லும் போது அடித்தும், துன்புருத்தியும் இருக்கின்றனர் ஆனாலும் தேவன் அந்த இடங்களில் இருந்தும் மக்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் ஊழியத்தில் அநேக பாடுகள் பிரச்சனைகள் வருமைகள் இருந்த போதிலும் தேவன் இன்றுவரை எங்களையும் எங்களுடைய குடும்பத்தையும் அற்புதமாக நடத்தி வருகின்றார், அதற்கு நாங்கள் தேவனுக்கே நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே எங்கள் குடும்பத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
- ஆமென்.
உதவிசெய்ய வல்லவர்.!
எபிரெயர் 2 : 14-15,18
14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
15. ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
18. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.