மகிழ்ச்சியை தேடி .!

 மகிழ்ச்சியாய்  வாழ  தேவையான  ஒரே  வழி👇

 
ஒளியின் ஓசை

நிலையற்ற இவ்வுலகில் மண்ணைத்தேடி, பொன்னைத்தேடி, வேலையைத் தேடி, விடியலைத் தேடி, வேடிக்கையைத் தேடி, புகழைத் தேடி, பதவியைத் தேடி, அதிகாரத்தைத் தேடி என்று பம்பரமாகச் சுழலும் அநேகருக்கு வாழ்க்கையில் உண்மையான சந்தோஷம் எங்கு இருக்கின்றது என்றே தெரிவதில்லை.

வாழ்க்கை என்பது மிகவும் சவாலான ஒன்றுதான் என்பதை நாம் அனைவருமே ஒப்புக்கொள்வோம். இன்பமும், துன்பமும் நிறைந்ததுதான் உலகம், ஆனால் அதிகமாக துன்பத்தையே சந்திக்கின்றோம் என்றே நாம் எண்ணுகிறோம்.

எத்தனை வசதி, சம்பாத்தியம், சொந்த பந்தங்கள் இருந்தாலும் அநேகர் சந்தோஷத்தை தொலைத்தவர்களாகவே இம்மட்டும் வாழ்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.

மகிழ்ச்சி என்பது சற்று நேரம் தோன்றி மறைந்துபோகின்ற கானல் நீராயிருக்க காரணம் என்ன? உண்மையான சந்தோஷம் ஒரு மனிதனுக்குள் எப்பொழுது நீடித்திருக்கும் என்பதை இன்றைய சிந்தனை பகுதிமூலம் நேரம் எடுத்துக் கற்றுக்கொள்வோம்

_ஒரு நாட்டை ஆண்ட மன்னருக்கு திடீர் என்று ஓர் சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி.    “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள். யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள். மறுநாள், மன்னர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார். முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது”என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “எல்லோருக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?” அதனால் இது சரியான விளக்கம் அல்ல.” என அதை நிராகரித்தார் மன்னர்.

அடுத்ததாக, இசை கருவி இருந்தது. அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார்.

அடுத்து, அழகான மலர்கள் இருந்தன. “இவை, கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?. அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தது. “நோயாளிகளுக்கு  எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்.?” என்று கூறி அதனையும் நிராகரித்த மன்னர்.*

அடுத்தாக ஒரு பெரிய  சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.  இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார் மன்னர். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார். “நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? இதன் பொருள் என்ன? என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.” என்றார் மன்னர் அந்த சிற்பியிடம்.“அரசே நான் ஒரு சிற்பி, இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான். இந்த உலகில் அன்பை மட்டும்தான், கண் தெரியாதவர்ளும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும். அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும் அன்பைதான் எதிர்பார்க்கிறார்கள். அன்பு மட்டுமே உலகில் சிறந்தது. அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும். அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும்  அன்பு. அதனால்தான் தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்தேன் என விளக்கினார் சிற்பி. இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார். “உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற  என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம் என்று அகமகிழ்ந்து சிற்பியை பாராட்டி பரிசளித்தார் அரசர்.

ஆம் பிரியமானவர்களே, இந்த உலகில் மகிழ்ச்சி என்பது தூய அன்பில்தன் இருக்கின்றது. அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்? உண்மையான அன்பில் அளவில்லாத மற்றும் அழியா மகிழ்ச்சி இருக்கின்றது என்பதை அறிந்தவர்கள் மிகக்குறைவு. எல்லோரும் மகிழ்ச்சியை எங்கெங்கோ தேடி, ஓடி கடைசியில் ஏங்கி நிற்பது இந்த அன்பிற்குதான். அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது. ஆனால் அந்த அன்பு இந்த கடைசி காலத்தில் மனிதர்களிடம் தனிந்துபோய்விட்டது. யாரிடமும்  உண்மையான அன்பு இல்லை என்று எல்லோருமே சொல்லுகிறோம், அந்த அன்பு என்னிடம் இருக்கின்றதா என்று எல்லோரும் நிதானித்து அதை வளர்த்துக்கொண்டால் இந்த பூமியில் எல்லோருமே சந்தோஷமாய் வாழமுடியும். என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று யோவான் 15 ஆம் அதிகாரம் 11 முதல் 13 வரை உள்ள வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு தெளிவாக போதித்திருக்கின்றார். கிறிஸ்துவத்தின் ஆணி வேரே இந்த அன்புதான். ஆம் நமது தேவன் அன்பாகவே இருக்கின்றார். நாமும் அன்பாக இருக்கவே விரும்புகின்றார். அன்பை கூட்டி வழங்குங்கள்! அன்பு வாங்கபடுவது அல்ல. அன்பு வழங்கபடுவது!. இதை நிதானிப்போம், அனைவருக்குள்ளும் இன்பம் பெருக அன்பாகவே இருப்போம்!

                                                                                             - ஆமேன்!

 

Post a Comment

Previous Post Next Post