அறியப்படாதவர்களாய் இருப்போம்.!

*அறியப்படாதவர்களாய் இருப்போம்*


தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? - (யோவான் 5:44).

இந்த உலகத்தில் நமக்கென்று ஒரு பெயர் வேண்டும், சமுதாயத்தில் சபையில் நாம் பேர் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று நம்மில் அநேகர் நினைப்பதுண்டு. ஒரு சிறு காரியத்தை செய்து விட்டு, தன் பெயர், வெளியிடப்படும் புத்தகத்திலோ, பேப்பரிலோ சிலர் திருமண பத்திரிகையில் வர வேண்டும் என்றும்  இல்லாவிட்டால் அதற்காக பெரிய சண்டையே போடும் ஆட்களும் உண்டு.

சாத்தானால் கொண்டுவரப்படுகிற இந்த சோதனையை நாம் வளரவிடுவோமானால் பின்னால் அது ஒரு கண்ணியாக மாறிவிடக் கூடிய அபாயம் உண்டு. புகழ் பெற வேண்டும் என்னும் விருப்பம் தலைதூக்க ஆரம்பித்தால், வேடனின் வலையில் விழும் குருவியைப் போல சாத்தானின் கண்ணியில் நாம் எளிதாக விழுந்து விடுவோம்.  

'நான் பெரியவனாக வேண்டும் என்ற எண்ணத்தை நான் கைவிடும்வரை உண்மையான சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியவில்லை' என்றார் ஒருவர்.

இயேசுகிறிஸ்துவின் வாழ்வை நாம் பார்ப்போமென்றால், தமது வாழ்வின் பெரும்பகுதியை அவர் தச்சராகவே தன் தகப்பனின் கீழ் கழித்தார். அவர் உலகின் பெரிய நாடுகளுக்கு சென்று பிரசங்கிக்க வேண்டும் என்று எண்ணாமல், நாசரேத்தையும் கலிலேயாவையும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு கால்நடையாக சென்று பிரசங்கித்தார்.

பெரிய அற்புதங்களையும் செய்துவிட்டு, 'ஒருவருக்கும் இதைக் குறித்து சொல்லாதே' என்றுதானே கூறினார். அவர் வேதாகமமே கொள்ள முடியாத அற்புதங்களை செய்த போதிலும், ஒருக்காலும் அதை பறைசாற்றவில்லை, அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவுமில்லை.

ஆனால் நாமோ நாம் செய்த செயல்களை காட்டி, பலருடைய கவனத்தையும் ஈர்க்க முயலுகிறோம். தேவனுக்காக செய்கின்ற ஆலயப்பணி, சுவிசேஷப்பணி போன்ற வேலைகளையும் நம்முடைய புகழ்ச்சிக்காக மற்றவர்கள் நாம் செய்யும் தியாகத்தை, காரியத்தை பாராட்ட வேண்டும் என்கிற நோக்கத்துடனே செய்கிறோம். நமது தாலந்துகள் மற்றவர்களுக்கு தெரியாமல் போவதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அறியப்படாத கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக இருக்க யாரும் விரும்புவதில்லை.

டார்பி என்னும் தேவ ஊழியர், 'இது தேவனுடைய ஊழியம், இங்கு மனிதன் மறைக்கப்பட வேண்டும், தேவன் மகிமைப்பட வேண்டும். கர்த்தருடைய பணியில் விளம்பரம் செய்யக்கூடாது' என்று கூறுவார். அவருடைய கல்லறையில் எழுதப்பட்ட வாசகம், 'அறியப்படாதவராக இருக்க விரும்பியவர், ஆயினும் நன்கு அறியப்பட்டவர்' என்பதே. நானும் என் கல்லறையில் அப்படிப்பட்ட வார்த்தைகள் பொறிப்பதையே விரும்புவேன்.

அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்பதே யோவான் ஸ்நானகனின் விருப்பமாக இருந்ததல்லவா? நம் இருதயத்தின் நினைவுகள் எப்படி இருக்கிறது? நம் பெயர் வேண்டும் என்று காரியங்களை செய்கிறோமா? எல்லோராலும் அறியப்பட்ட ஒரு ஊழியரோ, ஒரு கிறிஸ்தவனோ வாழ்வில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டாலும் அது கிறிஸ்துவின் பெயருக்கு அதிக நிந்தையைக் கொண்டு வருமல்லவா?

தாழ்மையுள்ளவன் மேல் இரக்கம் பாராட்டுகிற தேவன், நாம் நம்மை வெளிப்படையாக அல்ல, உள்ளத்திலிருந்து கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தும்போது, அவர் நம்மை உயர்த்துவார். அவர் நம்மை உயர்த்தும்போது யாராலும் நம்மை தாழ்த்தவே முடியாது. கிறிஸ்து ஒருவரே பாராட்டும் மனிதராக நாம் வாழ விரும்புவோம். மற்றவர்களால் அறியப்படாத சிறியவனாக சிறியவளாக வாழ முயற்சிப்போம். கர்த்தர் அதை காண்பார். அனைவராலும் அறியப்பட்டவராக நம்மை உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா!
KoodaraVaasi

நிலையில்லாத வாழ்வில் நிலைத்து வாழ ஆசைப்படாதே .! சத்தியத்தை அறிந்து கொண்டு நித்தியத்தை நோக்கி பயணத்தை தொடருங்கள் ..!

Post a Comment

Previous Post Next Post