*நீடிய பொறுமையால் நிறைந்திருப்போம்*👇
நாம் மிகுந்த தேவபக்தியை நமது ஆவிக்குரிய விஷயத்தில் காட்டுவதில் மிகவும் கவனமாயிருக்கின்றோம். நன்றாக ஜெபிக்கின்றவர்களாக, வேத வசனம் கேட்பதில் ஆர்வமாக, சபை ஊழியத்தில் முக்கிய பங்கெடுப்பவர்களாக இருப்போம். நமது *ஆவிக்குரிய வாழ்க்கையில் நம்முடைய செயல்பாடுகளைக் குறித்து நமக்கு மிகப்பெரிய திருப்தி இருக்கலாம் ஆனால் அடுத்தவர்களோடு எப்படிப்பட்ட உறவை வைத்திருக்கின்றோம், எப்படி நடந்துகொள்ளுகின்றோம் என்பதில்தான் நமது தேவபக்தி இருக்கின்றது என்பதை மறக்கக்கூடாது.* மற்றவர்களுடனான உறவில் எதற்கெடுத்தாலும் நாம் அவசரப்படுகின்றோம், ஆத்திரப்படுகின்றோம். நமக்கு பொறுமை என்பதே இருப்பதில்லை, அதிலும் நீடிய பொறுமையை பற்றி சொல்ல வேண்டுவதே இல்லை. *நம்முடைய குணம், நடந்துகொள்ளும் முறையை கவனித்து பார்த்தால், அநேகர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுகின்றவர்களாகவே இருக்கின்றோம்.* இன்றைக்கும் நம்மை ஆராய்ந்து பார்த்து ஒரு முக்கியமான குணத்தை கற்றுக்கொள்வோம்.
*_வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.* மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை படித்துக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார். *திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது. “என்ன இது?” என்று கேட்டார் முதியவர். லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்” சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?” “இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன். சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?” சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!” இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?” மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?” முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை.* அவருக்கருகில் அமர்ந்து அமைதியாக வேதத்தை வாசித்துக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது. அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. *தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது; “எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.* இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.
ஆம், பிரியமானவர்களே! இந்த உதாரணத்தில் இருக்கும் நபரை போன்று *நாமும் விரைவில் எரிச்சல், கோபம், ஆத்திரம் கொண்டு எளிதாக நமது உணர்சிகளுக்கு அடிமையாகி வாழ்ந்து வருகின்றோம். மற்றவர்களிடம் சற்றும் பொறுமையை காண்பிப்பது இல்லை, அடுத்தவர்களின் நிலையை சற்றும் நிதானிப்பது இல்லை. மிக எளிதாக குற்றம் சாட்டி, குறை கூறி நாம் குற்றவாளிகளாகிவிடுகிறோம். இதன் விளைவு நாம் அநேக உறவுகளை இழந்து வருகின்றோம்.* பிரியமானவர்களே, யோசித்துப்பாருங்கள், ஒருவேளை தேவன் நம்மிடம் பொறுமையை காண்பிக்காமல் நமது செய்கைக்கு தக்கதாக நடந்திருந்தால் நாம் நிர்மூலமாகியிருப்போம் அல்லவா? இதை உணர்ந்த பவுல் அவர்கள் *முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச்செய்தபடியினால் இரக்கம்பெற்றேன். அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்* என்று 1 தீமோ 1:13, 16 ல் சொல்லுகிறார். இதை உணர்ந்தவராகத்தான் தேவனுடைய நீடிய பொறுமையை தன் வாழ்க்கையிலும் கடைபிடித்து, விசுவாசிகளையும் நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். என்று கொலோசியர் 3: 12, 13 ல் திடமாக ஊக்குவிக்கின்றார்.
ஆகவே பிரியமானவர்களே, தேவனுடைய நீடிய பொறுமையை ஆசீர்வாதமாக அடைந்த நாம், மற்றவர்களோடு நீடிய பொறுமையை காண்பித்து அழகான தேவகுணத்தோடு மற்றவர்களோடு நடந்து நமது தேவபக்தியால் தேவனை மகிமைப்படுத்துவோம். ஆமென்..!
Tags:
சிந்திக்க சில வரிகள்.