நம்பிக்கையை - கிறிஸ்துமஸ்

நம்பிக்கையை பெருக்கும்  கிறிஸ்துமஸ் 




“விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.” -  லூக்கா 1: 45


கரீபியன் கடலில் குளித்து பொழுதைப்போக்க மூன்று பேர் கடலின் ஆழமான  இடத்தைத் தேடிப் படகில் சென்றனர். குறிப்பிட்ட ஓர்  இடத்தில் மூன்று பேரும்  குளித்துக் கொண்டிருக்கையில் அதில் சற்று வயதில் மூத்த ஒருவருக்கு  திடீரென பயமும் படபடப்பும் உண்டானது,  இவருக்கு உதவி செய்யும்படி ஒருவர் அவரை நோக்கி இங்கே வாருங்கள். இங்கே நிற்கும்படி ஒரு பாறை உள்ளது என்றார். முதலில் அதை நம்ப மறுத்த அந்த மனிதர், தன் சக நண்பர்  நிற்கும் இடத்தைக் கண்டு அங்கு போனார். இப்பொழுது இவருக்கு நிற்க ஓரிடம் கிடைத்துவிட்டது.  சுற்றிலும் தண்ணீரும், தண்ணீரின் அழுத்தங்களும்  தன்னை நெருக்கிக் காணப்பட்டாலும் இப்பொழுதோ பயமில்லை.  தான் நிற்பதற்கு ஒரு பாறை உள்ளது. மனதில் நம்பிக்கை காணப்பட்டது.

 

இச்சம்பவத்தினூடே நாம் பரிசுத்த வேதாகமத்திற்குள் நுழையலாம். எவ்வித நம்பிக்கையும், தரிசனமுற்ற காலத்தில் சகரியா-எலிசபெத் என்ற வயதான தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். மல்கியாவிற்கு பின்பு சுமார் 400 வருடங்கள் “அமைதியின் காலம்“ என கூறப்படுவதை நாம் அறியலாம். எலிசபெத்தைக் குறித்துச் சொல்லும்போது, குழந்தைப்பேறில்லாத மலடி என அழைக்கப்படுவதைக் காணலாம்.  எலிசபெத் வாழ்க்கையில் வேதனைகளும், நிந்தனைகளுமே நிறைந்திருந்தது ( லூக்கா1-7,24,25).  இவ்வேதனையான சூழலில் தேவன் இடைப்பட ஆரம்பித்தார். வனாந்திரத்தில் வழியையும் , அவாந்திர வெளிகளில் பாதைகளையும் உண்டு பண்ணுகிறவர்  எலிசபெத்திற்கு இரட்டிப்பான சந்தோஷத்தைக் கொடுத்து ஆசீர்வதித்தார்.  குழந்தை பாக்கியம் இல்லாத எலிசபெத் கர்ப்பவதியானது, இரண்டாவதாக  தன்

உறவின் முறையில் உள்ள மரியாள் மூலம் உலக இரட்சகர் இயேசு  பிறக்கப்போகிறார் என்கிற செய்தி எலிசபெத்தை மகிழ்ச்சியில் 

திக்குமுக்காடச்  செய்தது.

 

“விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்“ என்கிறாள். எலிசபெத்தின் முதல்  கிறிஸ்துமஸே  நம்பிக்கையை அதிகரிப்பதும், சந்தோஷம் நிறைந்ததுமாய் இருந்தது . 


பிரியமானவர்களே ! இந்த கிறிஸ்துமஸ்  உங்களுக்கு நன்மையைக் கொண்டு  வரப்போகிறது. விசுவாசிக்கிறீர்களா?  திரளான தண்ணீர்கள் சூழ நீங்கள் நடுவே இருப்பதைப் போலவும், பயங்கள் வேதனைகள் மத்தியில் இருக்கிறீர்களா? உங்களை தாங்கிப் பிடிப்பதற்கும், ஏந்துவதற்கும்  பாறையாம்  கன்மலையாகிய  கிறிஸ்து இருக்கிறார். உங்கள் இரண்டு பாதங்களையும்  பாறையில்  நன்றாய் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.  திரளான தண்ணீர்களும் நம்மைச் சேதப்படுத்தாது . தேவையற்ற பயம் உங்களில் வேண்டாம் . உங்கள் நம்பிக்கையை கிறிஸ்துவின் மேல் அதிகப்படுத்துங்கள்.   கிறிஸ்துமஸ் நாட்கள் உங்களுக்கு இனிதாக  அமைய எலிசபெத்தோடு இணைந்து உங்களை வாழ்த்துகிறோம்.


 

Post a Comment

Previous Post Next Post