*சாட்சியாய் வாழ்வதே, மிகப் பெரிய சாதனை.*👇
கர்த்தருக்கென்று அதிகமாக ஊழியத்தில் ஈடுபடுவதும், பெரிய அளவு காணிக்கை கொடுப்பதும், அநேக காரியங்களை திறமையாக செய்வதுமே மிக சிறந்த காரியமாக பார்ப்பது நமது வாடிக்கை. ஆனால் எதை தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்? தேவன் எல்லோரையும் கொடுக்கின்றவர்களாக வைக்கவில்லை, எல்லோரையும் திறமையானவர்களாக எதிர்பார்க்கவில்லை, ஆனால் *மீட்கப்பட்ட ஒவ்வொருவரையும் சாட்சியாக வாழ விரும்புகின்றார்.* இதை குறித்து இன்று நேரம் எடுத்து சிந்திப்போம்!
*_மும்பையில் RSS தாளாளர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் பள்ளி ஒன்றில் கிதியோனியருக்கு புதிய ஏற்பாடு கொடுக்க பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தடை இருந்தது.* ஓர் நாளில் பள்ளியின் மாத சம்பளம் கொடுப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாயினை எடுத்து வரும்படி இரு ஆசிரியர்கள் வங்கிக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் இருவரும் கைப்பை ஒன்றில் பணத்தை வைத்துக் கொண்டு ஆட்டோ ஒன்றில் பள்ளிக்கு வந்தனர். மறதியில் கைப்பையை ஆட்டோவில் விட்டுவிட்டு தாளாளர் முன் வந்து நின்றனர். பணம் எங்கே என்று தாளாளர் கேட்க, அவர் வைத்திருப்பார் என்று இவரும், இவர் வைத்திருப்பார் என்று அவரும் கேட்டுக் கொண்டிருந்தனர். தாளாளர் கடுமையான கோபத்தில் அவர்களைத் திட்டிக்கொண்டிருக்க, *ஆட்டோ டிரைவர் ஒருவர் உள்ளே நுழைந்தார். தன் கையிலிருந்த கைப்பையை தாளாளரிடம் கொடுத்தார். கைப்பையைத் திறந்து அதனுள் பணம் முழுதும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு அந்த டிரைவரிடம், "எப்படி பணத்தாசை இன்றி நேர்மையாய் இந்தப் பணத்தை ஒப்படைத்தாய்"? என்று கேட்டார். அப்பொழுது அந்த ஆட்டோ டிரைவர் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு புதிய ஏற்பாட்டை எடுத்துக் காண்பித்து, "ஐயா இது என் மகனுக்கு பள்ளியில் இலவசமாக கொடுக்கப்பட்டது. நான் சவாரி இல்லாத நேரங்களில் இதனை வாசிப்பேன்". இதில் எபிரேயர் 13 :5-ல், "நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று வாசித்திருக்கிறேன். ஆகையால்தான் என்னுடையதில்லாத இந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தேன் என்றார்.* இதனைக் கேட்ட தாளாளர் இருதயத்தில் குத்தப்பட்டவராய் மனம் நெகிழ்ந்து, *"இந்தப் புத்தகத்தையா கொடுக்கக் கூடாது என்று தடைசெய்தேன்?" என்று வருந்தியதுடன் புதிய ஏற்பாட்டிலிருந்த முகாமின் தொடர்பு எண்ணை அழைத்து, "ஐயா எங்கள் பள்ளியில் பயிலும் 3000 மாணவ, மாணவியர்க்கு நீங்கள் இந்தப் புதிய ஏற்பாட்டை எப்பொழுது வேண்டுமானாலும் கொடுக்கலாம், உங்களுக்காக எங்கள் பள்ளியின் கதவுகள் எப்பொழும் திறந்திருக்கும்" என்றார்.*
ஆம் பிரியமானவர்களே! *ஒரு மனிதனுடைய உண்மை, கர்த்தரை எதிர்த்த மனிதனுடைய வாழ்க்கையை அசைத்தது. அவரின் சாட்சி அநேகருடைய கைகளில் வேதாகமம் கிடைக்க வழியாக இருந்தது. இத்தனை வருடங்களாக வசனத்தை வாசிக்கும் நாம் என்ன மாற்றத்தை பெற்றிருக்கின்றோம்.* வெறும் அறிவு வீண், அதை வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தவில்லை என்றால் நாம் மாய்மாலமானவர்களாகத்தான் இருப்போம். *நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்* என்று 1பேதுரு 2: 9 ல் வாசிக்கின்றோம். *நமது சாட்சிதான் அடுத்தவரை ஆண்டவரிடம் அழைத்துவரும்.* புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று வேதம் நமக்கு புத்தி சொல்கின்றதை நாம் உணரவேண்டியது அவசியம். *நாம் யாரும் இரத்த சாட்சியாக மரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் இரத்தம் சிந்தி மரித்தவருக்கு சாட்சியாக வாழ அழைக்கப்படுகிறோம். சிந்திப்போம், ஆமென்.*
Tags:
சிந்திக்க சில வரிகள்.