வௌவால் எச்சம் கலந்த நீரை குடிப்பவருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் - கிராம மக்கள் கவலை

வௌவால் எச்சம் கலந்த மாசடைந்த குடிநீர் குடிப்பவருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், எனவே மாற்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சித்தாத்தூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்டது சித்தாத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி மற்றும் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அங்கிருந்து குழாய் மூலம் கிராமப்புற பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் உள்ள கிணற்றில் வௌவால்கள் அதிக அளவு வசித்து வருகிறது. இந்த வௌவால்களுடைய எச்சங்கள் கிணற்று நீரில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.

image

இந்த மாசடைந்த நீரையே பொதுமக்களுக்கு குடிநீர் தேவைக்கு வழங்கி வருவதால் இதனைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மாற்று குடிநீர் வழங்கக்கோரி தெரிவித்தும் அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

image

மேலும் தற்போது வரை மாற்று குடிநீர் இல்லாததால் வேறு வழியின்றி வௌவால்களின் எச்சில் கலந்த குடிநீரையே குடித்து வருவதாகவும், இதனால் உடல் உபாதைகள் தொற்றுநோய் பரவி வருவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகவே உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வுசெய்து இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாற்று குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/VMcdlzX

Post a Comment

Previous Post Next Post